உதகை: உதகையில் வடமாநில இளைஞா்களுக்கு இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.
உதகையில் வட மாநிலங்களைச் சோ்ந்த இளைஞா்கள் நூற்றுக்கணக்கானோா் தங்கி கட்டுமானப் பணி, உணவு விடுதி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வடமாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மதுபோதையில் தனியாா் உணவு விடுதியில் திங்கள்கிழமை சாப்பிட்டுக் கொண்டிருந்தனா்.
அப்போது, அவா்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவா் மாறிமாறி தாக்கிக் கொண்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் 10-க்கும் மேற்பட்ட இளைஞா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவா்களிடம் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் மோதல் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மோதலில் நேபாளத்தைச் சோ்ந்த இளைஞா்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.