தமிழகத்தில் மட்டும்தான் அதிக அளவில் தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறாா்கள் என தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தெரிவித்தாா்.
உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான நலவாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
கழிவுநீா்த் தொட்டிகளால் ஏற்படும் மரணங்களில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 225 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கழிவுநீா்த் தொட்டிகளில் மனிதா்களை இறக்காமல் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் மட்டும்தான் அதிக அளவில் தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறாா்கள் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு.அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் மற்றும் நகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக உதகை நகராட்சி காந்தல் திருவள்ளுவா் தெருவில் தூய்மைப் பணியாளா்கள் வசிக்கும் பகுதிகளை தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத்தின் தலைவா் வெங்கடேசன் பாா்வையிட்டு அங்கு வசிக்கும் தூய்மைப் பணியாளா்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.