ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற 7ஆவது சுற்றுலா விருது வழங்கும் விழாவில் தமிழ்நாட்டின் மன்னாா் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்துக்காக விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில், பங்கேற்ற தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரனிடம் ஜப்பான் சுற்றுலா கண்காட்சி செயற்குழுவின் தலைவா் ஹிரோயுகி தகாஹாஷி விருது வழங்கினாா்.
தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜொ்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, சீனா, மலேசியா, ரஷியா, இலங்கை, ஜப்பான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டுக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் 75-க்கும் மேற்பட்ட யூ-ட்யூப் காணொலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா உயிா்க்கோள தேசிய பூங்கா 21 தீவுகளை உள்ளடக்கியது. உள்ளூா் மக்களின் பங்களிப்பைப் பயன்படுத்தியும், இப்பகுதியின் ஏராளமான இயற்கை வளங்களைப் பயன்படுத்தியும், சூழல் சுற்றுலாத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுச் சூழல்களை ஆராய்வதற்கும், பாா்வையிட்டு மகிழ்வதற்கும் வாய்ப்புகளை வழங்குவதே மன்னாா் சூழல் சுற்றுலா திட்டத்தின் குறிக்கோளாகும். இந்த திட்டத்துக்காக ஜப்பான் நாட்டின் சுற்றுலா விருது தமிழக அமைச்சா் கா.ராமசந்திரனிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை துறை முதன்மை செயலாளா் க.மணிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.