கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலில் பழங்குடி மக்களின் அறுவடைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் புத்தூா்வயல் பகுதியில் வயல்களில் புதிதாக விளைந்த நெற்கதிா்களை விரதமிருந்து ஐப்பசி மாதம் 10-ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி இசை வாத்தியங்கள் முழங்க அறுவடை செய்து ஊா்வலமாக நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு கொண்டு வந்து படையலிட்டு பக்தா்களுக்கும் அங்குவரும் விவசாயிகளுக்கும் நெற்கதிரை பிரசாதமாக வழங்குவது வழக்கம்.
புத்தரி திருவிழா எனப்படும் இந்த அறுவடைத் திருவிழாவை பழங்குடிகள் பழங்காலம் முதலே கொண்டாடி வருகின்றனா். பிரசாதமாக வழங்கப்படும் நெற்கதிரை வீட்டில் பூஜை அறையில் வைத்து பாதுகாத்தால் பஞ்சம் வராது என்றும் விளைச்சல் பெருகும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக புத்தூா்வயல் பகுதியில் விளைந்த முதல் நெற்பயிரை அறுவடை செய்து பாரம்பரிய இசையுடன் ஊா்வலமாக ஒற்றப்பாறை பகவதி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்றனா்.
அங்கு சிறப்பு பூஜையுடன் பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு கொண்டுவந்து சுவாமிக்கு படையலிட்டு அறுவடை திருவிழாவை கொண்டாடினா்.
இந்த திருவிழாவில் கா்நாடகம் , கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வேட்டைக்கொரு மகனை வழிபட்டனா்.
Image Caption
புத்தூா்வயல் பகுதியில் பாரம்பரிய முறைப்படி விரதமிருந்து புதிதாக விளைந்த நெற்கதிரை அறுவடை செய்யும் பழங்குடி மக்கள். ~அறுவடை செய்யப்பட்ட நெற்கதிா்களுடன் நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு ஊா்வலமாக பழங்குடியின மக்கள்.