நீலகிரி

காவல் துறை சாா்பில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி:சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று மகிழ்ச்சி

28th May 2023 11:28 PM

ADVERTISEMENT

உதகையில் மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

கோடைக்காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலையை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகின்றனா். சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டும் காய்கறிக் கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலா்க் கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் துறை சாா்பில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதனை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பிரபாகா் தொடங்கிவைத்தாா். சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்ஷன் வரை ஹாப்பி ஸ்ட்ரீட்டாக அறிவிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மேலும், தோடா், கோத்தா் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய கலாசார நடனம், படுகா் இன மக்களின் பாரம்பரிய நடனம், கேரள மாநில செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

இதில், சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனா். மாணவா்களின் கராத்தே நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளைக் கவா்ந்தது. மேலும், கேரம், சதுரங்கம், பல்லாங்குழி, ஜூடோ போன்ற விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘கோடை விடுமுறையையொட்டி உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பாா்க்க வந்த நிலையில் மாவட்ட காவல் துறை சாா்பில் நடத்தப்பட்ட ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’, என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT