உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நீலகிரி குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாடு, வெளியூா்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவர மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள், கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழக அரசு சாா்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில், நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகள், மலைமுகடுகள், அரியவகை பறவை இனங்கள், வனவிலங்குகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடா், கோத்தா், குறும்பா் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவா்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தனா்.
இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.