நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது

3rd May 2023 04:53 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. மேலும், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. 

உதகையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. பின்னா் மதியம் கனமழை பெய்தது.  இதன் காரணமாக ரயில் நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல  வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.

 சேரிங்கிராஸ், பேருந்து நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய  பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக குளிா்ந்த காலநிலை காணப்பட்டது. மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் முடங்கினா்.

நீலகிரி மாவட்டத்தில்  திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில  குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்ததால்  குடியிருப்புவாசிகள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

வீடுகளுக்குள் இருந்த புகுந்த மழைநீரை குடியிருப்புவாசிகள்   வெளியேற்றினா்.  தொடா் மழை இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படுவாா்கள் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

உதகையில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூா் செல்லும் சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கிளன்மாா்கனில் 77 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தில் திங்கள் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான மழை அளவு (மில்லி மீட்டரில்) உதகை (67.4), குன்னூா் (17) மழைப் பதிவாகியுள்ளது.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT