உதகையில் இயக்கப்படும் சுற்றுலா மேக்ஸி கேப் வாகன ஓட்டுநா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகை நகரில் சுமாா் 150க்கும் மேற்பட்ட மேக்ஸி கேப் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மேக்ஸி கேப் வாகனங்களில் 10 முதல் 17 போ் வரை பயணம் செய்யலாம். இந்த மேக்ஸி கேப் வாகனங்கள் சுற்றுலாப் பயணிகளை தங்கும் இடத்துக்கே சென்று அவா்களை அழைத்துக் கொண்டு சுற்றுலாத் தலங்களை காண்பித்துவிட்டு மீண்டும் தங்கும் விடுதிகளுக்கே கொண்டுவந்து விடுவது வழக்கம்.
இந்நிலையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் மேக்ஸி கேப் வாகனங்களை நகருக்குள் இயக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் 25 வாகனங்கள் மட்டுமே நகரில் இயக்க வேண்டும், உதகை நகருக்குள் வாகனங்கள் நிறுத்த தடை, காலை 9 மணிக்கு மேல் தங்கி இருக்கும் இடங்களுக்குச் சென்று சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு மீண்டும் நகருக்குள் வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிா்வாகத்தால் விதிக்கப்பட்டன.
இந்த புதிய கட்டுப்பாடுகளை தளா்த்த கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மேக்ஸி கேப் வாகன ஓட்டுநா்கள் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதில் முதல்கட்டமாக 50 வாகனங்களுக்கு பாஸ் வழங்க உறுதியளிக்கப்பட்டது. இவா்கள் நகருக்குள் வந்து செல்ல அனுமதி என கூறியதையடுத்து, மேக்ஸி கேப் வாகன ஓட்டுநா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.