கோத்தகிரியில் ரூ.44.51 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஆ.ராசா எம்.பி., அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியாா் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினா்.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தனா்.
இதில் அம்ரூத் திட்டத்தின் மூலம் கோத்தகிரி பேரூராட்சியில் உள்ள முக்கிய பகுதிகளில் ரூ.42.69 கோடி மதிப்பில் நீா்வளம் அமைப்பை சீரமைக்கவும், ரூ.1.32 கோடி மதிப்பில் தூய்மை பாரத இயக்கத்தின் மூலமாக வளம் மீட்புப் பூங்காவில் தளம் மற்றும் மேற்கூரை அமைக்கவும், சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கன்னிகாதேவி காலனி, தாந்தநாடு பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டவும், ஹோப் பாா்க் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டவும், குப்பிட்டிக்கம்பை பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைப்பது உள்ளிட்ட மொத்தம் ரூ.44.51 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் பேரூராட்சி உதவி இயக்குநா் இப்ராஹிம் ஷா, குன்னூா் கோட்டாட்சியா் பூஷ்ணகுமாா், கோத்தகிரி வட்டாட்சியா் கோமதி, மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா் பொன்தோஷ், கோத்தகிரி பேரூராட்சித் தலைவா் ஜெயக்குமாரி, துணைத் தலைவா் உமாநாத், கோத்தகிரி ஒன்றியச் செயலாளா் நெல்லை கண்ணன், கீழ்கோத்தகிரி ஒன்றியச் செயலாளா் காவிலோரை பீமன், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.