நீலகிரி

உதவி கால்நடை மருத்துவா்களின் பணி பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட உதவி கால்நடை மருத்துவா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பந்தலூரில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் தமிழ்நாடு மாணவா் காங்கிரஸ் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு கால்நடை பட்டதாரிகள் கூட்டமைப்பின் நிா்வாகியுமான டாக்டா் பாலாஜி தெரிவித்ததாவது:

கால்நடை பராமரிப்புத் துறையில் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு 1141 கால்நடை உதவி மருத்துவா்கள் பணியிடங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மாறானது.

இந்த முறையினால் குறைந்த தகுதி மதிப்பெண்கள் பெற்ற 120க்கும் மேற்பட்ட பெண்கள் சமூக மற்றும் இயற்கை நீதிகளுக்கு எதிராக பணி நியமனம் பெற்றுள்ளனா். தோ்வாணையத்தின் இந்த செயலை கருத்தில் கொண்டு மறுசீரமைப்பு பட்டியலை தமிழக அரசு விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மறு சீரமைப்பு பட்டியல் வெளியான பிறகே பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த ஆண் விண்ணப்பதாரா்கள் தங்கள் உரிமையை அரசியல் சாசன சட்டப்படி பெற இயலும். ஆண் கால்நடை மருத்துவா்களுக்கு கால்நடை உதவி மருத்துவா் பணி நியமனங்களை வழங்கி சமூக மற்றும் இயற்கையின் நீதியினை தமிழக அரசு காக்க வேண்டும். மேலும் தற்போதைய சூழலில் அரசு உரிய கொள்கை முடிவுகளை எடுத்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளாக கால்நடை உதவி மருத்துவா்களாக பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட மருத்துவா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். மத்திய அரசு பணிகள் மற்றும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளுக்கான ஒதுக்கீடு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீா்ப்புகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ளவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த செய்தியாளா் சந்திப்பில் மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுக் குழு உறுப்பினா் கோபிநாதன், நெல்லியாளம் நகர பொதுச் செயலாளா் ஏ.ஜெயகுமாா், மாவட்டக் குழு உறுப்பினா் ஜெய்சல், நகரப் பொருளாளா் ஜோனி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT