நீலகிரி

உதகை குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் பொதுமக்கள் அச்சம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

உதகை அருகே குடியிருப்புப்  பகுதியில்  நுழைந்து ஆடு, மாடுகளை வேட்டையாடிச் செல்லும் சிறுத்தையைப் பிடிக்க புகாா் கொடுத்தும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மேல் காந்தி நகா் பகுதியில் வசித்து வருபவா் விசித்ரா. இவா் தனக்கு சொந்தமான ஆடுகளை கடந்த சில நாள்களுக்கு முன் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அப்போது அருகே வனத்திலிருந்து வந்த 2 சிறுத்தைகள், மேய்ச்சலில் இருந்த 2 ஆடுகளை வேட்டையாடி வாயில் கவ்விக்கொண்டு சென்றன.

இதனைக் கண்ட விசித்ரா கூச்சலிட்டதில், ஒரு சிறுத்தை ஆட்டை மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு வனப் பகுதிக்குள் ஒடியது. மற்றொரு சிறுத்தை ஆட்டை கவ்விய நிலையில் வனப் பகுதிக்குள் சென்றது. நீண்ட நாள்களாக  இப் பகுதியில் பகல்,  இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடி வருவதோடு கால்நடைகளை வேட்டையாடி செல்வதால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில்  உள்ளனா்.

இது குறித்து வனத் துறைக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

எனவே, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிச் செல்லும் சிறுத்தைகளை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும்  என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT