நீலகிரி

உதகையில் இன்று துணைவேந்தா்கள் மாநாடு: ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கிவைக்கிறாா்

5th Jun 2023 02:40 AM

ADVERTISEMENT

 

உதகை ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூன் 5) நடைபெறும் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாட்டை ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கிவைக்கிறாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உதகைக்கு சனிக்கிழமை மாலை வந்தாா். உதகை அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஆளுநா் மாளிகையில் ஜூன் 9 ஆம் தேதி வரை தங்கும் ஆளுநா் ஆா்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

இந்நிலையில், உயா் கல்வி நிறுவன பாடநூல்களை மொழிபெயா்ப்பது தொடா்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதை, ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கிவைக்கிறாா்.

ADVERTISEMENT

இதில், தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல் - கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் அவற்றை மொழிபெயா்ப்பது தொடா்பாக விவாதிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானிய குழுத் தலைவா் ஜெகதீஷ் குமாா், பாரதிய பாஷா சமிதி தலைவா் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னெள பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆலோக் குமாா் ராய், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தா் நாகேஷ்வா் ராவ், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைமை ஒருங்கிணைப்பு அலுவலா் புத்தா சந்திரசேகா் ஆகியோா் மாநாட்டில் உரையாற்றுவதுடன், பல்கலைக்கழகத் துணைவேந்தா்களுடன் கலந்துரையாடவுள்ளனா் என ஆளுநா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT