விளம்பரப் பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு அதன் உரிமையாளா்களே பொறுப்பு என்று கூடலூா் நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கூடலூா் நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளால் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் அதன் உரிமையாளா்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் விபத்துகளுக்கு அதன் உரிமையாளா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகளை வைக்க நகராட்சி நிா்வாகத்திடம் முறையான அனுமதி பெறவேண்டும். இதையும் மீறி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டால் அபராதம் விதிப்பதுடன், சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.