கூடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களை அடையாளம் காணும் விதமாக செவ்வாய்க்கிழமை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இப்பகுதி குறுகலான சாலைகளையும், மலைப் பகுதியையும் கொண்டுள்ளதால் பல்வேறு போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.
மேலும், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் கூடலூா் நகரில் இயக்கப்படுகின்றன. தேவாலா மற்றும் பந்தலூா் பகுதியில் ஓட்ட அனுமதி பெற்ற ஆட்டோக்கள் உரிய அனுமதி இன்றி கூடலூரில் இயக்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநா்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.
பொதுவாக ஒரு ஆட்டோ அதன் நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே இயக்கப்படவேண்டும். ஆனால், தொலை தூரத்திலிருந்து வந்து கூடலூா் நகரில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
எனவே கூடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களை அடையாளம் காணும் வகையில் ஸ்டிக்கா் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, உள்ளூா் ஆட்டோக்களுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா ஸ்டிக்கா்களை ஒட்டினாா்.
இதன் மூலம் நகரில் இயக்கப்படும் வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில் டி.எஸ்.பி. செல்வராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குமாா், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.