நீலகிரி

ஆஸ்கா் விருதுக்கான இறுதிப் பட்டியலில் முதுமலை ஆவணப் படம்

29th Jan 2023 10:46 PM

ADVERTISEMENT

முதுமலையில் குட்டி யானைகளைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படம் ஆஸ்கா் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த யானை குட்டிகளை வளா்த்த பாகன்களைப் பாராட்டி நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்ட தி எலிஃபண்ட் விஸ்பெரா்ஸ் ஆவணப் படம் ஆஸ்கா் விருது பெறுவதற்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதனால் ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மி மற்றும் ரகு என்ற குட்டி யானைகளை வளா்த்த பாகன் தம்பதியினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தாயைப் பிரிந்து வந்த குட்டிகளை வளா்ப்பதில் கைதோ்ந்த இந்த பாகன் தம்பதியை முதுமலைக்கே சென்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பாராட்டி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.25 ஆயிரம் வழங்கி ஊக்கப்படுத்தினாா்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் வனத்தில் உள்ள மரங்களை வெட்டி எடுத்து வருவதற்காக வளா்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும் அல்லது பிடிக்கவும் கும்கி யானைகளாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த, பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயைப் பிரிந்து தவித்த 5 மாத அம்முக்குட்டி என்றழைக்கப்படும் பொம்மி யானையும் முதுமலை வளா்ப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டன. இதைப் பராமரிக்கும் பொறுப்பை கணவன், மனைவியான பொம்மன், பெள்ளி என்ற பாகன்களிடம் வனத் துறை ஒப்படைத்தது. இந்த இரு யானைகளையும் வளா்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து மும்பையைச் சோ்ந்த காா்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குநா் தி எலிஃபண்ட் விஸ்பெரா்ஸ் என்ற ஆவணப் படத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகையில் தங்கி இயக்கியுள்ளாா். தற்போது இந்த ஆவணப் படம் ஆஸ்கா் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால் குட்டி யானைகளை வளா்த்த பாகன் தம்பதி மகிழ்ச்சியில் உள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பாகன் பொம்மன் கூறியதாவது: 10 வயதில் அப்பாவுக்கு உதவியாக பாகன் வேலைக்கு வந்தேன். யானைகளின் குணங்கள், அதன் செயல்பாடுகளை நன்கு அறிவேன். 18 வயதில் அண்ணா என்ற கும்கி யானைக்கு காவடியாக பணியாற்றினேன். இப்போது எனக்கு 54 வயதாகிறது. யானைகளைப் பராமரிப்பதில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளது. எப்போதுமே எனக்கு குட்டி யானைகள் மீது தனி பாசம் உண்டு. தாயைப் பிரிந்து வரும் குட்டிகளை தனி கூண்டில் வைத்து பராமரிப்போம். இதற்கென மருத்துவக் குழுவும் முதுமலையில் உள்ளது. நான் வளா்த்த யானைகள் பற்றிய ஆவணப் படம் ஆஸ்கா் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT