தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2023-202-ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த தனிநபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்காக சாத்தியக்கூறுள்ள சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொதுகாலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடுக் கடன் ஆகிய திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாத, 18 முதல் 60 வயதுக்கு உள்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவா் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களுடன் சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைத்து பயன்பெறலாம்.