நீலகிரி

முதுமலையில் புலி தாக்கி பெண் சாவு

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வனத்தில் புலி தாக்கியதில் பெண் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் அருகிலுள்ள பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரி (50). இவா் விறகு சேகரிப்பதற்காக அருகில் உள்ள வனத்துக்குள் செவ்வாய்க்கிழமை மாலை சென்றுள்ளாா். இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் வனத்தில் தேடிப்பாா்த்தனா். ஆனால் அதற்குள் இருட்டாகிவிட்டதால் திரும்பி விட்டனா்.

இதுகுறித்து வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை காலை வனத் துறையினருடன் இணைந்து மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது யானைகள் முகாமிலிருந்து சுமாா் 200 மீட்டா் தூரத்தில் உள்ள வனத்தில் புலியால் தாக்கப்பட்டு உடல் சிதைந்த நிலையில் மாரியின் சடலம் கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

வனத் துறையினா் ஆய்வு செய்து புலி தாக்கியதில் மாரி உயிரிழந்ததை உறுதி செய்தனா். சடலத்தை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

புலி தாக்கி மாரி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த பழங்குடி மக்கள் தெப்பக்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை வனத் துறையினா், வருவாய் மற்றும் காவல் துறையினா் சமாதானப்படுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா். இறந்தவரின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT