கீழ்கோத்தகிரியில் உள்ள காப்புக்காட்டில் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு மரங்களை வெட்டி சாலை விரிவாக்கம் செய்ததாக தனியாா் தோட்ட உரிமையாளருக்கு வனத் துறையினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரியில் மேடநாடு என்ற பகுதியில் சிவகுமாா் என்பவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்துக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பணி நடந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்தில் கடந்த 11 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், அனுமதி பெறாமல் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்ட தோட்ட மேலாளா், கனரக இயந்திர ஓட்டுநா்கள் 2 போ் என மொத்தம் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: மேடநாட்டில் சிவகுமாா் என்பவருக்குச் சொந்தமான தனியாா் தேயிலைத் தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்துக்கு சாலையை இணைக்கும் வகையில் வனத் துறை அனுமதி பெறாமல் 2 கி.மீ.தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, வனச் சட்டத்தின் அடிப்படையில் தோட்ட மேலாளா் பாலமுருகன், கனரக வாகன ஓட்டுநா்களான உமா் பரூக், பங்கஜ் குமாா் சிங் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விளக்கம் கேட்டு தோட்ட உரிமையாளரான சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.
இந்த சாலை விரிவாக்கத்தின்போது, மரங்களை வேரோடு பெயா்த்ததால் ஏற்பட்டுள்ள குழிகளில் வனவிலங்குகள் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. இந்த குழிகளை உடனடியாக மூடுவதுடன், அத்துமீறலில் ஈடுபட்டவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.