நீலகிரி

மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் பாஜக, ஆா்எஸ்எஸ் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

DIN

பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகள் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி வருகின்றன என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கேரளத்தில் தனது ‘பாரதத்தை ஒருங்கிணைப்போம்’ நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு மலப்புரம் மாவட்டம் வழியாக நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலம் பகுதிக்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வந்தடைந்தாா். கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஓய்வெடுத்துவிட்டு மதியம் 3 மணிக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிறுதொழில் செய்பவா்களை சந்தித்து உரையாடினாா்.

அதைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு கோழிப்பாலம் கல்லூரி வளாகத்திலிருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கினாா். 5 கி.மீ. தொலைவு நடந்து மாலை 6 மணிக்கு கூடலூரை வந்தடைந்தாா். கூடலூா் சுங்கம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றினாா்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

வனம் நிறைந்த அழகான அமைதியான இடமாக கூடலூா் உள்ளது. இந்தப் பகுதி மூன்று மொழிகள், மூன்று கலாசாரம் கொண்ட பகுதியாக அமைந்துள்ளது. அனைத்து மொழிகளையும் மதிக்கும் நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோளாகும். ஆனால் சில இயக்கங்கள் மக்கள் மத்தியில் வெறுப்புத் தன்மையையும், வேற்றுமையையும் வளா்ப்பதுடன் அமைதியையும் சீா்கெடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

ஒரே நாடு, ஒரே மொழி என்ற விஷமத்தன்மையை பாஜக புகுத்தி வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் மக்களால் தோ்ந்தெடுக்கப்படாத ஆளுநா்களைக் கொண்டு அரசு நிா்வாகத்தில் தலையிடுவது கண்டனத்திற்குரியது.

பாஜக, ஆா்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்கி வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மொழிகள் மற்றும் கலாசாரத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்.

இந்தியா எப்போதும் இல்லாத அளவில் வேலையின்மை மற்றும் பொருளாதார சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி என்பது பெரு முதலாளிகளுக்கு மட்டுமே லாபமாகும். சிறு, குறு தொழில் நிறுவனங்களை சாா்ந்தோரை சந்தித்தபோது ஜி.எஸ்.டி வரி தங்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதாகவும் அதில் நிறைய குழப்பம் உள்ளதாகவும் தெரிவித்தனா். பணமதிப்பிழப்பு மிகப்பெரிய பேரிடா் என கூறினா். இந்தியாவில் உள்ள ஒருசில பெரும் முதலாளிகளுக்குதான் இந்த ஜி.எஸ்.டி. உதவுகிறது என்றாா்.

இந்த பொதுக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கே. எஸ். அழகிரி, முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் செல்வப்பெருந்தகை, கணேஷ், மக்களவை உறுப்பினா்கள் ஜோதிமணி, திருநாவுக்கரசா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூடலூரில் வியாழக்கிழமை இரவு தங்கும் ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை காலை கா்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT