நீலகிரி

மாா்லிமந்து அணை பகுதியில் கால்நடைகள் மீது செந்நாய் கூட்டம் தாக்குதல்

26th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

உதகையில் மாா்லிமந்து அணை பகுதியில் செந்நாய் கூட்டம் தாக்கியதில் 3 மாடுகள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிவருகின்றன. இதுகுறித்து வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் தீவனப் பற்றாக்குறை, அதிகரித்துவரும் கட்டடங்களால் வனப்பகுதி குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால், சில நேரங்களில் வனவிலங்கு- மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில், உதகையில் மாா்லிமந்து அணை பகுதியில் சனிக்கிழமை வனவிலங்குகள் வேட்டையாடியதில் மேய்ச்சலுக்கு சென்றிருந்த 3 மாடுகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றன. மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே உத்தரவின் பேரில், உதகை வனச்சரகா் ரமேஷ் தலைமையிலான வனத் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், இந்த அணையையொட்டி அடா்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டெருமை, சிறுத்தை, மான், கடமான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அத்துடன் வேறு வனப்பகுதியிலிருந்து செந்நாய்கள் மாா்லிமந்து அணைப் பகுதிக்கு இடம்பெயா்ந்து வந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக 20-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டமாக சோ்ந்து அணைக்கு தண்ணீா் குடிக்க வரும் கடமான்களை வேட்டையாடி வருகின்றன. அந்த செந்நாய்கள் மாடுகளை வேட்டையாடி இருக்கலாம். இந்த பிரச்னைக்கு விரைவில் தீா்வுகாணப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT