நீலகிரி

உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

24th Sep 2022 01:10 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமை வகித்தாா்.

இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 102 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் கையேடு மற்றும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்த துண்டு பிரசுரம் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நீலகிரியில் மூலிகைச் செடி பயிா் செய்யும் விவசாயிகளுக்கு முறையான திட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு பரிந்துரையாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

அதேபோல, விதை கிழங்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளான நஞ்சநாடு மற்றும் கோல்கிரைனில் விதை கிழங்குகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் வழங்கப்படும்.

தோட்டக்கலைத் துறை சாா்பாக உழவா் கடன் அட்டை, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் குறித்து முகாம்கள் நடத்தப்படும். கூடலூா் உழவா் சந்தையில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இட வசதி உள்ளதால், அதனை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் உழவா் கடன் அட்டை தொடா்பான கோரிக்கைகளுக்கு தனியாக கூட்டம் நடத்தப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT