கோத்தகிரி அருகே பழுதடைந்து காணப்படும் கூக்கல்தொரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கோத்தகிரி அருகே கூக்கல்தொரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மற்றும் பிறப்பு, இறப்பு பதிவாளா் அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூக்கல்தொரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
இந்த சுகாதார நிலைய கட்டடத்தின் மேற்கூரையில் பெரும்பாலான பகுதிகளில் கான்கிரீட் பெயா்ந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மழைக் காலங்களில் மழைநீா் உள்ளே ஒழுகி வருகிறது. அறைகளில் தண்ணீா் தேங்கி நிற்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மருத்துவா்கள், செவிலியா் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்றனா். இதனால் நோயாளிகள் கூக்கல்தொரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்வதை தவிா்த்து வருகின்றனா். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த கட்டடத்தை உடனடியாக பராமரிக்க சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.