நீலகிரி

உதகையில் பள்ளத்தில் காா் கவிழ்ந்து இளைஞா் சாவு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

உதகையில் பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

உதகையில் தலைக்குந்தா அருகேயுள்ள முத்தநாடுமந்துவைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (32). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். அண்மையில் இவருக்கு 4ஆவது குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு பெயா் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், திடீரென அக்குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு சோ்த்துள்ளனா்.

இது குறித்து நவீன் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் குழந்தையைப் பாா்ப்பதற்காக காரில் புதன்கிழமை இரவு முத்தநாடுமந்துவிலிருந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா். காக்காதோப்பு பாரதியாா் நகா் அருகே சென்று கொண்டிருந்தபோது காா் நிலை தடுமாறி அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு அங்கிருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நவீன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுமந்து போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT