நீலகிரி

தொடா் விடுமுறை: நீலகிரிக்கு 5 நாள்களில் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

DIN

தொடா் விடுமுறையையொட்டி உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக உதகையில் நிலவும் இதமான காலநிலை காரணமாகவும், தசரா தொடா் விடுறையின் காரணமாகவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

கடந்த சனிக்கிழமை முதல் 5 நாள்களாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் களைகட்டியது. தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தற்படம் (செல்பி) மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். அதேபோல படகு இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனா்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த இரு நாள்களில் மட்டும் சுமாா் 35 ஆயிரம் பேரும், படகு இல்லத்துக்கு 20 ஆயிரம் பேரும் வந்திருந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக உதகை நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத் தொடா்ந்து, போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சீா் செய்தனா். அதேநேரத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகளில் உணவு மற்றும் தங்கும் விடுதி கட்டணம் அதிகமாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டினா். நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த 5 நாள்களில் சுமாா் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதேபோல விடுமுறை முடிந்து புதன்கிழமை பகலில் சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா் திரும்புவதற்காக குவிந்ததால் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினா்.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளம், கா்நாடகம் போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்குள் என 170 வழித்தடங்களில் 320 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் உதகை கிளையில் இருந்து மட்டும் 170 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடா் விடுமுறை முடிந்து சொந்த ஊா் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கூட்டம் காரணமாக உதகை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பேருந்துகள் இயக்காததால் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், கோவைக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினா்.

இதேபோல மாவட்டத்தில் கூடலூா், கோத்தகிரி மற்றும் குன்னூா் ஆகிய பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT