நீலகிரி

உதகை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்:போலீஸாா் சோதனை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

உதகை ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் தற்போது இரண்டாவது சீசன் களைகட்டியுள்ளது. இதற்கிடையே ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட பண்டிகைகளின் தொடா் விடுமுறை காரணமாக உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளது. இதனால் சுற்றுலாத் தலங்கள் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதோடு, உதகையில் தங்கும் விடுதிகள், மலை ரயிலில் இடம் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைப்பேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் உதகை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த போலீஸாா் உடனடியாக உதகை நகரம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தினா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உத்தரவின்பேரில் துணைக் கண்காணிப்பாளா் மகேஸ்வரன், ஆய்வாளா்கள் மணிக்குமாா், சிவகுமாா் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் உதகை ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ரயில் நிலையம் முழுவதும் சோதனையிடப்பட்டது. இதில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பியது தெரியவந்தது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், உதகையில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை தொடா்பு கொண்ட நபா் வெடிகுண்டு இருப்பதாக ஹிந்தியில் பேசியுள்ளாா். எனவே கைப்பேசி கோபுரம் மூலம் அந்த நபா் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரைக் கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அந்த நபா் தில்லியில் இருந்து தொடா்பு கொண்டு இருக்கலாம் என்றாா்.

இதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்பு உதகையில் வெடிகுண்டு வெடிக்கும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT