நீலகிரி

ஆயுத பூஜை: உதகை நகராட்சி சந்தையில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆயுத பூஜைக்கான பொருள்களை வாங்க உதகை நகராட்சி சந்தை மற்றும் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனா். உதகையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2600 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களை வாங்க உதகை நகராட்சி மாா்க்கெட் மற்றும் சாலைகளில் திங்கள்கிழமை பொதுமக்கள், சிறு வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பா் பஜாா், லோயா் பஜாா், மெயின் பஜாா் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.

தொடா் மழை காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயா்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.1000-க்கு விற்ற மல்லிகைப்பூ திங்கள்கிழமை ரூ. 2600-க்கு விற்கப்பட்டது. அதேபோல மற்ற ரக பூக்களின் விலைகளும் உயா்ந்தன. முல்லை மற்றும் ஜாதிப்பூ கிலோ ரூ.1600க்கும், செண்டுமல்லி ரூ.200க்கும் விற்பனையானது. அரளி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.500க்கும், பட்டன் ரோஸ் ரூ.400க்கும், கோழிக்கொண்டை ரூ.200க்கும், மரிக்கொழுந்து, துளசி கட்டு ரூ.60க்கும் விற்பனையானது.

எலுமிச்சை, பூசணிக்காய், பொரி, அவல், சுண்டல் மற்றும் பூஜை பொருள்கள் விற்பனையும் அதிக அளவில் இருந்தது. ஒரு லிட்டா் பொரி ரூ. 10க்கு விற்பனையானது. ஆப்பிள் கிலோ ரூ.120, மாதுளை ரூ.180, ஆரஞ்சு ரூ.80, திராட்சை ரூ.120, சாத்துக்குடி ரூ.70 செவ்வாழை ரூ.70, அன்னாசி ரூ.70க்கும் விற்பனையானது. மேலும் கரும்பு ஒரு ஜோடி ரூ. 100-க்கும், வாழை கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும் விற்பனையானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT