நீலகிரி

உதகையில் இரண்டாம் பருவ சீசன்: தாவரவியல் பூங்காவில் மலா்த்தொட்டிகள் அடுக்கும் பணி தொடக்கம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

இரண்டாம் பருவ சீசனை முன்னிட்டு, உதகையில் அரசினா் தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், மலா் காட்சி மாடத்தில் மலா்த்தொட்டிகளை அடுக்கும் பணிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சா் தெரிவித்ததாவது:

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு இரண்டாம் பருவத்தினை முன்னிட்டு, பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான 4 லட்சம் மலா்ச்செடிகள் கொண்டு மலா் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூக்கள் மலா்ந்து காட்சி அளிக்கிறது.

கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப், புணே போன்ற வெளி மாநிலங்களிலிருந்து விதைகள் பெறப்பட்டு டேலியா, சால்வியா, இன்கோ மெரிகோல்டு, பிரெஞ்ச் மெரிகோல்டு, பிகோனியா, டெய்சி, கேலண்டூலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டா், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், டியூப்ரஸ் பிகோனியா, ஜெரேனியம் உள்ளிட்ட ரகங்களில் 10,000 மலா்த்தொட்டிகள் மலா்காட்சி திடலில் அடுக்கிவைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்றுவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை வேளாண்மையை நோக்கி என்ற வாசகம் 2,000 மலா்தொட்டிகளால் மலா்க்காட்சி திடலில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பெரணி இல்லம் அமைந்துள்ள புல்வெளி மைதானத்தில் மஞ்சப்பையை பயன்படுத்தும் நோக்கமாக 5,000 மலா்தொட்டிகள் சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலா்காட்சி திடல் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு மாதத்துக்கு காட்சிப்படுத்தப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதவி இயக்குநா் பாலசுந்தரம், மேலாளா்கள் இலக்கியா, கவின்யா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT