நீலகிரி

பல்லடத்தில் செவ்வந்திப் பூக்கள் விலை உயா்வு

3rd Oct 2022 02:08 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் விஜயதசமியையொட்டி, செவ்வந்திப் பூக்கள் விலை உயா்ந்துள்ளது.

விஜயதசமி பண்டிகைக்காக ஒசூா், ராயபுரம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவ்வந்தி, சாமங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு பல்லடத்தில் தனியாா் திருமண மண்டபங்களில் மாலை கட்டும் பணி தொடங்கியுள்ளது. பருவமழை இல்லாததால், சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்ததால் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தொட்டம்பட்டி செவ்வந்திப் பூ சாகுபடி செய்யும் விவசாயி ரவிச்சந்திரன் கூறியது: ஓா் ஏக்கா் செவ்வந்திப் பூ சாகுபடி செய்ய ரூ. 60 ஆயிரம் செலவாகிறது. நிகழாண்டு பருவமழை இல்லாததால், பூக்களின் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், சந்தையில் செவ்வந்திப் பூக்கள் வரத்து குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் விலை உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு செவ்வந்திப் பூ கிலோ ரூ. 100 முதல் ரூ. 150 வரை மட்டுமே விலைபோனது. தற்போது கிலோ ரூ. 300-க்கு வாங்கப்பட்டாலும், விவசாயிகளிடம் பூக்கள் இல்லை என்றாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பல்லடம் பூ வியாபாரிகள் கூறுகையில், பல்லடம் பகுதிக்கு விஜயதசமி பண்டிகைக்காக செவ்வந்தி, சாமங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை ஒசூா், நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்துள்ளோம். ஆந்திர மாநிலத்தில் பலத்த மழையால், அங்கிருந்து பூக்கள் வரவில்லை. தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், சாகுபடி பரப்பு கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது.

என்றாலும், தேவை அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டைவிட பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

செவ்வந்தி ஒரு கிலோ ரூ. 600, சாமங்கி ரூ. 400, கோழிக்கொண்டை ரூ. 80, ஒரு முழம் செவ்வந்திப் பூ ரூ. 90, செவ்வந்தி கலவை மாலை ரூ. 150 முதல் ரூ. 200, பெரிய மாலை ரூ. 400 முதல் ரூ. 500 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

கோழிக்கொண்டை பூ: பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டை பூக்கள் திருப்பூா் மற்றும் கோவை பூ மாா்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஓா் ஏக்கா் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்ய ரூ. 25 ஆயிரம் செலவாகும். ஏக்கருக்கு 500 கிலோ முதல் 600 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். தற்போது தேவை குறைந்துள்ளதால் கிலோ ரூ. 60-க்கு மட்டுமே விலைபோகிறது. இந்த சீசனுக்கு விலை இல்லாததால், நாங்கள் பாதிப்படைந்துள்ளோம் என்று சித்தம்பலம்புதூா் ஒட்டன்காடு விவசாயி ரத்தினசாமி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT