நீலகிரி

நீலகிரியில் 53 சாலைகள் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது

1st Oct 2022 05:06 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக 53 சாலைகள் கண்டறியப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்குப் பருவ மழையால் பாலாடா, ஏம்ரால்டு ஆகிய பகுதிகளில் சரி செய்யப்பட்ட சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை இடைவிடாமல் மிகத் தீவிரமாக பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் ஒரே இரவில் 300 மி.மீ. மழை பெய்ததால் உதகையில் இருந்து ஏமரால்டு, அவலாஞ்சி ஆகிய பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் சாலைகளில் தடுப்புச் சுவா்கள் அமைத்து, சீரமைத்தனா்.

ADVERTISEMENT

பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்போது தற்காலிகமாக சரி செய்துள்ளதாகவும், விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலுடன் தரமான சாலைகள் அமைக்கப்படும். மண்சரிவை தடுப்பது குறித்த மாதிரி திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் கோடப்பமந்து மற்றும் மரப்பாலம் ஆகிய பகுதிகளில் சோதனை முறையில் நெய்லிங் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்பகுதியில், தற்போது மண்சரிவு ஏற்படவில்லை. நீலகிரியில் உள்ள 53 சாலைகள் மண்சரிவு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தமிழக முதலவரின் கனவு திட்டமான 23 சதவீத வனப் பகுதியை 33 சதவீத வனப் பகுதியாக விரிவாக்கும் திட்டமான பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் அமைச்சா்கள் எ.வ.வேலு, கா.ராமசந்திரன், நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக் ஆகியோா் மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT