நீலகிரி

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய விடுதிக்கு ‘சீல்’

18th Nov 2022 11:57 PM

ADVERTISEMENT

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், பாட்டில்கள் பயன்படுத்திய விடுதிக்கு நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை 2019 ஜனவரி முதல் தடை செய்து தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீலகிரியின் சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டு அதற்கு முன்னரே 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் அதிகம் இருந்ததால் நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டா், 2 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, நகராட்சி சுகாதாரத் துறையினா் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

அதன்படி, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய உதகை காந்தல் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, சுற்றுலாப் பயணிகள் வந்த பேருந்துகளை சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களைக் கொண்டு வந்த இரு பேருந்து ஓட்டுநா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT