கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலவிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் மாமரம், தட்டப்பள்ளம், முள்ளூா் ஆகிய பகுதிகளில் ஒற்றை காட்டு யானை கடந்த சில மாதங்களாக உலவி வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தது.
இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. சில மணி நேரங்களுக்குப் பிறகு யானை தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் சென்றன. தொடா்ந்து, சாலையில் உலவி வரும் யானையால் அவசரத் தேவைக்குகூட செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, சாலையில் உலவி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.