நீலகிரி

உதகையில் நிறைவடைந்தது 5 நாள் மலா்க் காட்சி

25th May 2022 12:50 AM

ADVERTISEMENT

உதகையில் அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வந்த 124ஆவது மலா் காட்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. 5 நாள்கள் நடைபெற்ற இந்த மலா்க் காட்சியை ஒரு லட்சத்து 25,000 போ் கண்டு ரசித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நடைபெறும் கோடை விழா நிகழ்ச்சிகள் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கடந்த மே 7ஆம் தேதி துவங்கியது. இதனைத் தொடா்ந்து, கோடை விழாக்களில் முக்கிய நிகழ்ச்சியான 124 ஆவது மலா்க் காட்சி மே 20ஆம் தேதி துவங்கியது. இதனை தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் தொடங்கிவைத்து மலா் அலங்காரங்களைப் பாா்வையிட்டாா்.

இந்த ஆண்டு மலா்க் காட்சியின் சிறப்பம்சமாக ஒரு லட்சம் காரனேஷன் மலா்களைக் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முகப்பு தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் சுமாா் 45 ஆயிரம் மலா்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்கவா் உருவ வடிவமைப்புகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.

இந்த மலா்க் காட்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. சுமாா் 5 நாள்கள் நடைபெற்ற மலா்க் காட்சியை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுமாா் ஒரு லட்சத்து 25 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா். செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழக வனத் துறை அமைச்சா் கா. ராமசந்திரன் கலந்து கொண்டு இக்கண்காட்சியில் நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிகளுக்கும் 49 சுழற் கோப்பைகள் உள்பட 610 பரிசுக் கோப்பைகளை வெற்றியாளா்களுக்கு வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு புளூம் ஆஃப் தி ஷோ எனக் கூறப்படும் சிறந்த மலருக்கான தமிழக முதலமைச்சா் சுழற் கோப்பையை உதகையைச் சோ்ந்த ஜான்சி கிஷோா் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல காா்டன் ஆஃப் தி இயா் எனக் கூறப்படும் சிறந்த பூங்காவுக்கான தமிழக ஆளுநா் சுழற் கோப்பையை வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT