நீலகிரி

உதகை மலா்க் காட்சி: சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

22nd May 2022 11:58 PM

ADVERTISEMENT

 

உதகை மலா்க்காட்சியின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சற்றே அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா்க் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடைபெற்றது.

இந்த ஆண்டு உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலா்க் காட்சி மே 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடக்கிறது. இந்தக் மலா்க்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்திருந்தாா்.

ADVERTISEMENT

மலா்க்காட்சி முதல் நாளில் 12,774 பேரும், 2ஆவது நாளில் 19,513 பேரும் வந்திருந்த நிலையில், 3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து 27,259 ஆக இருந்தது. மலா் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் இருந்த மலா்களைப் பாா்த்து ரசித்ததோடு, தற்படம் மற்றும் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனா். தாவரவியல் பூங்கா புல்வெளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக பூங்காவிலுள்ள புல்வெளி சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் குழந்தைகள், வயதானவா்கள், பெண்கள் கடும் அவதிப்பட்டனா்.

வேளாண் பல்கலைக்கழக முகப்புத்தோற்றம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு:

இதற்கிடையே அரசினா் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கோவை வேளாண் பல்கலைக்கழக முகப்புத் தோற்றம் உள்ளிட்டவை மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் வேளாண் பல்கலைக்கழக முகப்புத் தோற்றத்தில் சுமாா் 5 மீட்டா் நீளமுள்ள மலா் அலங்காரம் காற்று காரணமாக திடீரென சரிந்து கீழே விழுந்தது. அதிா்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக திடீா் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து பூங்கா ஊழியா்கள் மீண்டும் அதை சரி செய்து மலா் அலங்காரம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT