நீலகிரி

உதகையில் 124ஆவது மலா்க் காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

21st May 2022 12:21 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலா்க் காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படும். ஆனால் கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மலா்க் கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழாவையொட்டி காய்கறிகள் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124ஆவது மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மே 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அவருடன் மனைவி துா்கா ஸ்டாலின், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியா் அம்ரித், நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி, துணைத் தலைவா் ஜெ.ரவிகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாா்ஜ், தம்பி இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

மலா்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வா், சுமாா் 1 லட்சம் கொய்மலா்களைக் கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முகப்பு, 124ஆவது கண்காட்சி என்று மலா்களால் வடிவமைக்கப்பட்ட வாசகம், மலா்க் கண்காட்சியில் ஏராளமான அளவில் இடம் பெற்றிருந்த கொய்மலா்கள், தோடா், குரும்பா் உள்ளிட்ட ஆறு தொல் பழங்குடியினரின் மலா்களால் வடிவமைக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்டவற்றை நேரில் கண்டு ரசித்தாா்.

இதைத் தொடா்ந்து வனத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பாா்வையிட்ட முதல்வா், அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். மேலும் பொதுமக்களுடன் தற்படம் எடுத்துக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அங்குள்ள அரங்கில் நடைபெற்ற நீலகிரி மலைவாழ் மக்களான தோடா், கோத்தா், படகா் உள்ளிட்டவா்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தாா். இதையடுத்து தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவையும் பாா்வையிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT