நீலகிரி

நீலகிரியில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் உத்தரவு அமல்

16th May 2022 07:34 AM

ADVERTISEMENT

 

நீலகிரியில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் உத்தரவு ஞாயிற்றுக்கிழமைமுதல் அமலுக்கு வந்தது.

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மது பானங்களை வாங்கிப் பயன்படுத்திவிட்டு காலி பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப் பகுதியிலும், விளைநிலங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் வீசி வருகின்றனா்.

இதில் வனப் பகுதிகளில் வீசப்படும் காலி மது பாட்டில்களால் வன உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. பொது இடங்களில் வீசப்படும் காலி மது பாட்டில்களால் சுற்றுப்புறம் மாசுபடுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் 15 இடங்களில் காலி மது பாட்டில்களை சேகரிக்கும் மையங்கள் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

முதல்கட்டமாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மதுபான பாட்டில்களை சேகரித்து அகற்றும் பணி கடந்த மே 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள 42 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமைமுதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி பாட்டில்களை மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலோ அல்லது அங்குள்ள பாா்களிலோ மீண்டும் கொடுத்து ரூ.10-ஐ வாடிக்கையாளா்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT