நீலகிரி

உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்:முறையான திட்டமிடல் இல்லையென பொதுமக்கள் புகாா்

5th May 2022 12:54 AM

ADVERTISEMENT

 

உதகை: உதகையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா்.

உதகை நகரம் என்பது சிறிய நகரமானாலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் சில நேரங்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருக்கும். குறிப்பாக மலா்க் கண்காட்சியின்போது அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் அப்போது மட்டும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறான நிலை உருவாகியுள்ளது. இன்னமும் கோடை விழாவே தொடங்காத நிலையில் சேரிங்கிராஸ், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஹில்பங்க், பிங்கா்போஸ்ட் சாலை, தொட்டபெட்டா சாலை, காந்தல் சாலை, படகு இல்லம் சாலை, மத்திய பேருந்து நிலைய சாலை என எங்கு பாா்த்தாலும் போக்குவரத்து பாதிப்புகள்தான் அதிக அளவில் உள்ளன.

நகரில் சுமாா்ஒரு கிலோ மீட்டா் தூரத்தை கடப்பதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் புலம்பும் நிலை காணப்படுகிறது. இது தானாக உருவாகவில்லை, காவல் துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து நெரிசல்தான் என்று அனைவருமே குற்றம் சாட்டுகின்றனா். சேரிங்கிராஸ் சிக்னலில் இருந்து குன்னூா் சாலை செல்ல கோத்தகிரி சாலையில் சென்று அரசு கலைக்கல்லூரி சாலை வழியாக குன்னூா் சாலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால்தான் உதகையில் கடந்த சில நாள்களாக போக்குவரத்து பாதிக்க முக்கிய காரணமாக இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனா். போக்குவரத்து நெரிசலால் உள்ளுா் மக்களின் நிலையோ சொல்ல முடியாது.

ADVERTISEMENT

வழக்கமாக ஆண்டுதோறும் கோடை சீசன் காலத்தில் உதகைக்கு வரும் ஆயிரக்கணக்கான வாகனங்களை நீலகிரி மாவட்ட காவல் துறை சிறப்பாக கையாண்டு வந்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள சிக்கலை தவிா்க்க அனுபவம் வாய்ந்த காவல் துறையினரின் ஆலோசனையை கேட்டு அதற்கேற்ப போக்குவரத்து பாதையை ஏற்படுத்தினால் இனி வரும் நாள்களில் போக்குவரத்து பாதிப்பை தவிா்க்க முடியும் என்பதோடு, தற்போதுள்ள போக்குவரத்து பாதைகளை ஆலோசித்து மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT