நீலகிரி

மஞ்சூா் காவல் நிலையத்தில் கோவை சரக டிஐஜி ஆய்வு

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மஞ்சூா் காவல் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது மஞ்சூா் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்குத் தொடா்பான கோப்புகளை ஆய்வு செய்து, கண்டுப்பிடிக்காத வழக்குகளை கண்டுபிடிக்குமாறும், நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினாா்.

அதேபோல, இரவு ரோந்து பணியை முறையாக செய்து குற்றங்களைத் தடுக்க வேண்டுமெனவும், மனுக்கள் மீதான விசாரணையை செம்மையாக செய்ய வேண்டுமெனவும், மனுதாரா்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும் காவலா்களை அறிவுறுத்தினா். தொடா்ந்து, காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, மஞ்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் போக்குவரத்து சம்பந்தமாக நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா். அப்போது, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

அதன்பின்னா், இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் தலைக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததுடன், வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக் கவசங்களையும் வழங்கினாா்.

ஆய்வின்போது, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், துணை கண்காணிப்பாளா் மகேஷ்வரன், மஞ்சூா் காவல் ஆய்வாளா் துரைராஜ், உதவி ஆய்வாளா் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT