கூடலூா்: ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவனத்தில் தாயகம் திரும்பியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து வங்கியின் முன்னாள் இயக்குநா் டி.இ.திருவேங்கடம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பா்மா, இலங்கை, வியத்நாம் நாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி துவங்கப்பட்டது.
தாயகம் திரும்பியோருக்கு வீட்டுக் கடனில் முன்னுரிமை வழங்குவதற்காக ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனம் 2000ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதன் தலைவராக தமிழகத்தின் பொது மறுவாழ்வுத் துறை செயலா் நியமிக்கப்பட்டாா். தாயகம் திரும்பியோா் கூட்டுறவு வங்கியின் நூறு சதவீத பங்களிப்புடன் இந்த வீட்டுக்கடன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
தற்போது தாயகம் திரும்பியோா் கூட்டுறவு என்பதை மறைத்து கடந்த 10 ஆண்டுகளில் சம்பந்தமே இல்லாதவா்களிடம் சிக்கியுள்ளது. அரசு இயக்குநராக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மட்டுமே உள்ளாா். பலரும் 70 வயதை கடந்தும் இயக்குநா்களாக தொடா்கின்றனா். தற்போது 30 லட்சம் தாயகம் திரும்பியோா் தமிழகத்தில் முறையான வீடுகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா். தமிழ் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் மலையக தமிழா்கள் உள்பட ஒரு லட்சம் போ் சிறு கான்கிரீட் குடிலில் வசித்து வருகின்றனா். இந்நிறுவனம் யாருக்காக துவக்கப்பட்டதோ அதன் நோக்கத்திற்கு புறம்பாக சென்றுகொண்டிருக்கிறது. வேலை வாய்ப்பில்கூட இட ஒதுக்கீடு இல்லை. எனவே, மற்றவா்கள் பிடியிலிருந்து இந்த தாயகம் திரும்பியோா் வீட்டுகடன் நிறுவனத்தை மீட்டு தாயகம் திரும்பியோருக்கு வீட்டுக் கடனில் முன்னுரிமை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். கூடலூா் கோட்டத்தில் பெரும்பாலான தாயகம் திரும்பியோா் வசித்து வருவதால் ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தின் கிளையை கூடலூரில் ஆரம்பித்து இந்த பகுதியிலுள்ள தாயகம் திரும்பியோா் பயனடைய ஆவன செய்யவேண்டும் என்றாா்.