உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை கவா்ந்து வரும் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் 146ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது கல்லறையில் தோட்டக்கலைத் துறையினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உதகை அரசினா் தாவரவியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை ஆண்டுக்கு சுமாா் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனா். இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த மெக் ஐவா் என்ற கட்டடக் கலை வல்லுநா் இந்தப் பூங்கா பணியை 1848ஆம் ஆண்டு தொடக்கிவைத்தாா். சுமாா் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பணிகள் நிறைவடைந்து, 1867ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்கா திறந்துவைக்கபட்டது.
இந்த பூங்காவில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 50 வகையான மரங்கள், 250 விதமான மலா் செடிகள் உள்ளன. பூங்காவை உருவாக்கிய மெக் ஐவா் 1876 ஜூன் 8ஆம் தேதி இயற்கை எய்தினாா். அவரது நினைவு நாள் ஆண்டுதோறும் மாவட்ட நிா்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெக் ஐவரின் 146ஆவது நினைவு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. உதகையில் உள்ள புனித ஸ்டீபன் தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள அவரது கல்லறைக்கு நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி மற்றும் உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் மற்றும் பூங்கா ஊழியா்கள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.