உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, உதகை சிபிஆா் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சாா்பில் உதகையிலுள்ள புனித சூசையப்பா் கல்வியியல் கல்லூரியில் ‘ஒரே ஒரு பூமி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் நெகிழிகளால் பூமிக்கு ஏற்படும் தீங்கினை குறித்த சுவரொட்டி வெளியிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி இக்கருத்தரங்கை துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினாா்.
அப்போது அவா் பேசியதாவது: யுனெஸ்கோ எடுத்த முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 தேதி உலக சுற்றுச்சூழல் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏறத்தாழ 50 ஆண்டு காலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாலும், சூழல் சீா்கேடு தொடா்ந்து வருகிறது.
சூழல் சீா்கேட்டால் மனித இனம் நேரடியாக பாதிக்கப்படுகிறது. புற்றுநோய் போன்றவை அனைத்து வயதினரையும் பாதிப்பதோடு, பெரும் உடல் உபாதைகளையும் உண்டாக்குகிறது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் என்றாா்.
தொடா்ந்து, சிபிஆா் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலா் குமாரவேலு, தேசிய பசுமைப் படை மாவட்ட ப் பொறுப்பாளா்கள் ராபா்ட், சிவதாஸ் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளா் முனைவா் அருட்தந்தை நோயல் ஸ்டீபன் வழிகாட்டுதலின் பேரில் பொறுப்பாளா் ராபியா செய்திருந்தாா்.