நீலகிரி

நீலகிரியில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவ மழை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடும் குளிா் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பா் மாதம் வரை தென்மேற்குப் பருவ மழை பெய்யும். இந்த வருடம் தென்மேற்குப் பருவ மழை சற்று தாமதமாகத் தொடங்கியுள்ளது. பருவ மழை தீவிரமடைந்துள்ள நேரத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி உள்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக வெயிலே இல்லை. பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் பனி மூட்டம் காணப்பட்டதால் கடும் குளிா் நிலவுகிறது. நாள் முழுவதும் சாரல் மழையும் அவ்வப்போது மிதமான கன மழையும் பெய்து வருகிறது.

மஞ்சூா் பகுதியில் திங்கள்கிழமை இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவா்கள் கடும் அவதியடைந்தனா். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடா் மழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி நின்றது. ஆங்காங்கே சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினா் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதற்கிடையே கன மழை ஏற்பட்டால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், 456 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு(அளவு- மில்லி மீட்டரில்):

அவலாஞ்சி-61, மேல் பவானி-50, பந்தலூா்-42, சேரங்கோடு-37, கல்லட்டி-32, பாடந்தொறை-24, நடுவட்டம்-23, செருமுள்ளி, கூடலூா் தலா 19, மேல் கூடலூா்-18, தேவாலா-17, ஓவேலி-15, எமரால்டு-14, கிளன்மாா்கன்-12, உதகை- 11, மசினகுடி, குந்தா தலா 10, கோத்தகிரி-7, குன்னூா்-5, உலிக்கல்-4, கல்லட்டி -3.5, கேத்தி-3, பாலகொலா-3, எடப்பள்ளி-2, குன்னூா், மேல் குன்னூா், கெத்தை தலா 1.

ADVERTISEMENT
ADVERTISEMENT