நீலகிரி

மஞ்சூா் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

5th Jul 2022 12:49 AM

ADVERTISEMENT

மஞ்சூா் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம், காரமடைக்கு சாலை செல்கிறது.

இந்த சாலை அடா்ந்த வனப் பகுதிக்குள் உள்ளதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவையிலிருந்து, மஞ்சூருக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, கெத்தை பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் சாலையில் நின்று கொண்டிருந்தன.

சாலையோரம் இருந்த மரக்கிளைகள், நெடுஞ்சாலை அறிவிப்புப் பதாகை ஆகியவற்றை திடீரென அவை துவம்சம் செய்தன.

இதனால், அரசுப் பேருந்து உள்பட பின்னால் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னா் காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றதும், வாகனங்கள் சென்றன.

மஞ்சூா், ஒக்கநாடு, கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி சோதனைச் சாவடி வரை யானைகள் சாலையிலேயே உலவி வருவதோடு, அவ்வப்போது சாலையின் குறுக்கே நின்று வாகனங்கள் செல்ல முடியாமல் அச்சுறுத்தியும் வருகின்றன.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

காட்டு யானைகள் சாலைகளில் உலவி வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.

யானையுடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கக் கூடாது.

குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும்போது வாகனங்களில் சாலையைக் கடக்க முயற்சி செய்யக் கூடாது என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT