நீலகிரி

வெளிமாவட்ட கால் டாக்சி விவகாரம்:உதகை சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை

5th Jul 2022 12:48 AM

ADVERTISEMENT

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தனியாா் கால் டாக்சி வாகனங்களை இயக்க ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உதகை சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், உதகை சுற்றுலா காா் ஓட்டுநா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளோ, தொழில்துறை நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலாப் பயணிகளை நம்பியே 3 ஆயிரத்தும் மேற்பட்ட வாகன ஓட்டுநா்கள் உள்ளனா்.

இந்நிலையில், சமவெளி பகுதியில் இருந்து இங்கு வரும் தனியாா் கால் டாக்சி வாகனங்கள் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா மையங்களுக்கும் அழைத்துச் செல்வதால் இங்குள்ள சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதை வலியுறுத்தி கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை பலமுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், துணை ஆட்சியா் ஆகியோா் தலைமையில்

குழு அமைக்கப்பட்டு தனியாா் கால் டாக்சி நிறுவனங்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

அதன்படி, வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் வாகனங்கள் இங்கு இறக்கிவிட்டு, இங்கிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது என்றும், கண்டிப்பாக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவை தனியாா் கால் டாக்சி நிறுவனத்தினா் முறையாக பின்பற்றுவது இல்லை. எனவே, இந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT