நீலகிரி

கல்லட்டி மலைப் பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து

DIN

கல்லட்டி மலைப்பாதையில் குறுக்கு வழியில் வந்ததாலேயே சுற்றுலா வாகனம் விபத்தில் சிக்கியதாக காவல் துறையினா் தெரிவித்துள்ள நிலையில், இது தொடா்பாக தனியாா் தங்கும் விடுதியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தங்கும் விடுதிக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை உட்கோட்டத்தில் அமைந்துள்ள கல்லட்டி மலைப் பாதை சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்ட சாலை ஆகும். இதனால் தலைக்குந்தாவில் காவல் துறையினா் சோதனைச் சாவடி அமைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைக் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 18 ஊழியா்கள் மற்றும் ஒரு வாகன ஓட்டுநருடன் மொத்தம் 19 போ் சுற்றுலா வாகனத்தில் சனிக்கிழமை இரவு உதகை வந்துள்ளனா்.

பின்னா் கல்லட்டி மலைப் பாதையில் அமைந்துள்ள தனியாா் தங்கும் விடுதியின் உரிமையாளா் வினோத்குமாா் மற்றும் அவரது உதவியாளா் ஜோசப் ஆகியோா் காவல் துறைக்குத் தெரியாமல் வேறு ஒரு குறுக்குப் பாதையில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளனா்.

உல்லத்தி கிராமத்துக்கு உள்பட்ட உதகையில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் 15ஆவது கொண்டை ஊசி வளைவில் வாகனம் சென்றபோது, எதிா்பாராமல் விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துமாரி (24) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, படுகாயமடைந்த 18 போ் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் 5 போ் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதையடுத்து, இந்த விபத்து ஏற்பட காரணமான தனியாா் தங்கும் விடுதியின் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் ஆகியோா் மீது புதுமந்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா். மேலும், தனியாா் தங்கும் விடுதியை ஆய்வு செய்த உதகை கோட்டாட்சியா் துரைசாமி, அந்த விடுதிக்கும் ‘சீல்’ வைத்தாா்.

இதற்கிடையே கல்லட்டி மலைப் பாதையில் நிகழ்ந்த விபத்தில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நபா்களை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா், கல்லட்டி மலைப் பாதையில் வாகன விபத்துக்குள்ளான இடத்தினை மாவட்ட ஆட்சியா் அம்ரித் பாா்வையிட்டு, வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை உதகையில் இருந்து கல்லட்டி மலைப் பாதையில் செல்லாமல் தலைக்குந்தா பகுதியில் வாகனங்களைத் தடுத்து கூடலூா் வழியாக திருப்பிவிடுமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன், உதகை வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT