நீலகிரி

ஆளுமையை வளா்த்துக் கொள்வதில் இணைய வழிக் கல்வி பெரும் அச்சுறுத்தலாக உள்ளது

2nd Jul 2022 11:18 PM

ADVERTISEMENT

 

கரோனா காலகட்டத்தில் மாணவா்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்தாலும், அத்தகைய இணைய வழிக் கல்வி நமது ஆளுமையை வளா்த்துக் கொள்வதில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாா் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள கிரசன்ட்  பள்ளியின் 25ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாா் பள்ளி வளாகத்தில், உதகை 200ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில் சோலை மரக்கன்றுகளை நடவு செய்து, பள்ளியின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா இலச்சினையை வெளியிட்டு பேசியதாவது:

குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து கையாள வேண்டும். கைப்பேசி மற்றும் இணைதள சேவைகளை மாணவ, மாணவிகள் கவனக்குறைவாக  பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்க காலத்தில் நம்மில் பலா் பல புதிய திறமைகளை வளா்த்துக் கொண்டுள்ளோம். அதனை உரிய வகையில் பயன்படுத்துங்கள். வெற்றி என்பது ஒரு நாளில் கிடைப்பது அல்ல. வெற்றியின் வரையறை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. 

கடின உழைப்பை நம்புங்கள். பள்ளிகளில் நேரடியாக கற்பிக்கப்படும் கல்வி, வலைத்தளங்களில் கிடைக்காது. இணையதள கல்வி பள்ளியின் நேரடி கல்விக்கு இணை ஆகாது. கரோனா தொற்றுக் காலத்தை நாம் கடந்துவிட்டோம், அது ஒரு பின்னடைவு மட்டுமே.

கரோனா காலகட்டத்தில் மாணவா்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அத்தகைய இணையதள வழி தற்போது நமது ஆளுமையை வளா்த்துக் கொள்வதில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் உமா் பாரூக், தமிழக அரசின் கானுயிா் சங்க உறுப்பினா் ஓசை காளிதாசன், பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT