நீலகிரி

காலநிலை மாற்றம்: சாகுபடிக்குத் தயாராகும் மலைத் தோட்டக் காய்கறி விவசாயிகள்

26th Jan 2022 07:27 AM

ADVERTISEMENT

குன்னூா், கோத்தகிரியில் இந்த மாத இறுதியில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்பதால் அடுத்த சாகுபடிக்கு மலைத் தோட்டக் காய்கறி விவசாயிகள் தயாராகி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில்  மலைத் தோட்ட விவசாயத்தை நம்பி  சுமாா்  83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனா். இங்கு   குளிா்காலப் பயிா்கள்,   மிதவெப்ப மண்டல பயிா்கள்,   வெப்ப மண்டல பயிா்கள் என பயிரிடப்படுகின்றன  . மலையின் உயரமான பரப்பில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி, இதர வகை பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மலையின் இடைப்பட்ட பகுதிகளில் கமலா ஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகின்றன. குறைந்த உயரப் பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி, துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  குன்னூா், கோத்தகிரி, பாலாடா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் மலைத் தோட்டக்  காய்கறிகளும், தேயிலையும் பயிரிடப்பட்டு வருகின்றன.  இவற்றில் பெரும்பாலான காய்கறிகள்  கடந்த  இரண்டு மாதங்களாக பெய்த பனியின் காரணமாக  கருகியும், அழுகியும்  நூற்றுக்கணக்கான ஏக்கரில்  வீணாகியுள்ளன.

இந்த மாத இறுதியோடு பனியின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்ப வாய்ப்பிருப்பதால்  மழைத் தோட்டக் காய்கறி பயிரிடும் விவசாயிகள் அடுத்த சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனா்.

ADVERTISEMENT

பிப்ரவரியில் புதிய சாகுபடி துவங்கும்போது மலைத் தோட்ட காய்கறிகளின் விலை படிப்படியாகக் குறையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT