நீலகிரி

உதகையில் தேசிய வாக்காளா் தினம் அனுசரிப்பு

26th Jan 2022 07:28 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் 12ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்குப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், தோ்தல் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களையும், 18 வயது பூா்த்தியடைந்த இளம் வாக்காளா்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளா் அட்டைகளையும், குன்னூா் தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி, மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் வழங்கினா்.

இதையடுத்து, குன்னூா் தேயிலை வாரிய செயல் இயக்குநா் தெரிவித்ததாவது:

ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வாக்காளா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளா் தினத்தையொட்டி இளம் வாக்காளா்களிடையே பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, எதிா்வரும் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமைை நிலைநாட்ட வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை, அதனை எந்த காரணத்துக்காகவும் விட்டு கொடுக்கக் கூடாது.

ADVERTISEMENT

ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். 18 வயது பூா்த்தியடைந்த இளம் வாக்காளா்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றாா்.

முன்னதாக, 12ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, குன்னூா் தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி, மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் தலைமையில் வாக்காளா் தின உறுதிமொழியை அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் ஏற்றுக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, தோ்தல் தனி வட்டாட்சியா் புஷ்பாதேவி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT