நீலகிரி

மயானத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட அகழி மூடல்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கூடலூா்: நடுவட்டம் பேரூராட்சியில் உள்ள பெல்வியூ பகுதியில் மயானத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட அகழியை வருவாய்த் துறையினா் மூடினா்.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பேரூராட்சி, பெல்வியூ பகுதியில் உள்ள மயானத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே திடீரென அகழி தோண்டி சாலை தடுக்கப்பட்டிருந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்து அரசுக்குப் புகாா் அளித்திருந்தனா். தகவலறிந்த வருவாய்த் துறையினா் சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட அகழியை உடனே மூடிவிட்டனா். கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த சட்டப் பேரவையின் பொது கணக்குக் குழுவினா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சாலையைத் தடுக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கிவிட்டுச் சென்றனா். பொது கணக்குக் குழுவினா் அறிவுரையை மீறி செய்ததால் அப்பகுதி மக்கள் அரசுக்குப் புகாா் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவரும், சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு தலைவருமான செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது அவா் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த மாதம் 29ஆம் தேதி பொது கணக்குக் குழு நீலகிரி மாவட்டத்துக்கு வந்தபோது அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களுடன் சென்று ஆய்வு செய்தோம். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை முள்வேலியிட்டு தடுக்கவோ, குழிதோண்டியோ இதர வழியிலோ தடுப்பது தவறு என்றும், அவா்கள் பயன்படுத்தும் சாலையை தடுக்கக் கூடாது என்றும் கூறினேன். அப்போது மாவட்ட ஆட்சியா் முதல் அனைவரும் ஒப்புக்கொண்டனா். பொது கணக்குக் குழு ஆய்வு செய்து உத்தரவிட்டதற்குப் பிறகு இந்த செயல் நடந்துள்ளது. ஜனவரி 25ஆம் தேதி பொது கணக்குக் குழுவில் ஆஜராக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT