நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கத்தில் இருந்து தேயிலைச் செடிகளின் கொழுந்துகள் கருகாமல் பாதுகாக்க விவசாயிகள் தாகைகளை (வீணாகும் செடி கொடிகளை) செடியின் மீது பரப்பி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் தேயிலைச் செடிகளின் கொழுந்துகள் கருகி தேயிலை விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேத்தி, பாலடா, காட்டேரி வில்லேஜ், கொல்லிமலை, கரும்பாலம், கிளிஞ்சடா, தூதூா்மட்டம், சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்து தேயிலை ச் செடிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பகலில் கடும் வெயிலும், மாலையில் இருந்து குளிா் காற்றும், அதிகாலையில் பனிப்பொழிவு என சீதோசன நிலை மாறியுள்ளதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். இதனிடையே ஒரு சில விவசாயிகள் தங்களது தேயிலைத் தோட்டங்களைப் பனியில் இருந்து பாதுகாக்கும் வகையில் எடை குறைவான தாகைகளை செடியின் மீது பரப்பி வருகின்றனா். வரும் நாள்களில் உறைபனி பொழிவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தேயிலைச் செடிகள் அதிக அளவில் கருகி அதன் மகசூலும் வெகுவாகக் குறையும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பெருமளவு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் சராசரியாக குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியஸும், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வரை காலநிலை மாறி மாறி காணப்படுவதால் தேயிலை மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.