நீலகிரி

நீலகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மழலையா் பள்ளிகள் திறப்பு

17th Feb 2022 12:50 AM

ADVERTISEMENT

 

உதகை: நீலகிரி மாவட்டத்தில் சுமாா் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னா் மழலையா் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் வந்த குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் மலா் கொடுத்து ஆசிரியா்கள் வரவேற்றனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த 23 மாதங்களுக்கு முன்னா் மழலையா் பள்ளிகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்துள்ள சூழலில் தமிழக அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, தமிழக அரசு அனுமதி அளித்துள்ள பல்வேறு தளா்வுகளின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மழலையா் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உள்ள மழலையா் பள்ளிகளுக்கு குழந்தைகள் புத்தகப்பை மாட்டிக் கொண்டு உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனா். அவா்களுக்குப் பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியைகள் இனிப்பு, மலா் உள்ளிட்டவற்றை வழங்கியதோடு, விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினா்.

உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கிரசென்ட் பிளே ஸ்கூல் பள்ளியின் தாளாளா் உமா் பாரூக் இதுதொடா்பாக கூறியதாவது:

ADVERTISEMENT

சுமாா் 23 மாதங்களுக்குப் பிறகு மழலையா் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா கட்டுப்பாட்டு விதிகளைக் கடைப்பிடித்து அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கடைபிடிக்கப்படும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, குழந்தைகளின் மனநிலைக்கேற்ப விளையாட்டு வகுப்புகளுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT